‘ரப்பர்’ நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறுவகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல். ‘ஆகாயத்துப் பறவைகள் விதைப்பதில்லை’ என்னும் பைபிள் வரியில் அவன் தன்னை உணர்கிறான்... அவ்வரியை அரற்றும் பிரான்ஸிஸின் மனம் ‘...ஆகாயத்துப் பறவைகள். ஆகாயத்தில் ஒரு பறவை!’ என்று ஓர் உச்சத்தை வந்தடைந்து திடுக்கிட்டு நிற்கிறது. அதுதான் நாவலின் உச்சம்.